சென்னை: திமுக கொடி கட்டப்பட்ட கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான விவகாரம் சர்ச்சையான நிலையில், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் அருகே  திமுக நிர்வாகி குடும்பத்தாரின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளை வரவேற்று, விழுப்புரம் அருகே திமுக சார்பில் சாலையோரம் முழுவதும் அனுமதியில்லாமல் கொடி கம்பம் நடப்பட்டது. இதற்கான பணியில் சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை பலர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திமுக கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பத்தை நடும்போது, அக்கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் அந்த கம்பத்தை நட்ட 13வயது மாணவன் திணேஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மாணவன்   விழுப்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்ததாகவும், கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வாழ்வாதாரம் கருதி இந்த பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மாணவர் உயிர் இழந்த விவகாரம் குறித்து, காவல்துறையினர் முறையான விசாரணை செய்யாமல், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவன் , தினேஷின் தாயார், காவல்துறையில் கொடுத்த புகாருக்கும், உரியான பதில் அளிக்க மறுத்த காவல்துறையினர்,  இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாஜக உள்பட சில கட்சிகள் மட்டுமே இதை பெரிதுபடுத்தின.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை மூடி மறைக்கும் வகையில், உயிரிழந்த தினேஷின் குடும்பத்தாருக்கு ரூ 1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றபோது திமுக உள்பட எதிர்க்கட்சிகள் காட்டிய வேகம்குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தே, திமுக சார்பில் கொடிகம்பம் கட்ட அனுமதி பெறவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ”கம்பம் நடவோ, பேனர் வைக்கவோ யாரும் எந்தவித அனுமதியும் பெறவில்லை, நாங்களும் எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை என்று என்று கூறினார். இதனால், திமுகவினர் அனுமதி பெறாமல் கொடிகம்பம் பேனர் வைத்து உறுதியானது. இதனால், திமுகமீதான விமர்சனங்களும் அதிகரித்தன.

இந்த நிலையில், திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,  உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர் கலாசாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் எனக் கோருகிறேன்.

விழுப்புரத்தில் கொடி கம்பம் நட முயன்று மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும்,  பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆரம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வேதனை அளிக்கிறது .

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.