ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள்  கல்லறைகளை தோண்டும் தண்டனையை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன.

இந் நிலையில் கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் தண்டனையாக கல்லறைகளை தோண்டுவது என்ற நூதன தண்டனை இந்தோனேஷியாவில் வழங்கப்படுகிறது.

அந்நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்கள் தண்டனையாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டும் தண்டனை அளிக்கப்படுகிறது.

இது குறித்து, செர்ம் மாவட்டத் தலைவர் சுயோனோ கூறியிருப்பதாவது: கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்ட 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால் முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டதாக கூறினார்.

இந்தோனேசியாவில் இதுவரை 2,25,030 கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. தொடர் பாதிப்புகளையடுத்து, அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ மார்ச் 31ம் தேதி பொது சுகாதார அவரச நிலையை அறிவித்தார்.