பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இயின் வரைவு பட்டியலில் பஞ்சாபி மொழி இடம்பெறாதது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பஞ்சாபி மொழி ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

புதிய உத்தரவின்படி, பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி – PSEB), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ – CBSE) அல்லது இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ – CISCE) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழியைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும் சிபிஎஸ்இயும் ஆண்டுக்கு இருமுறை தேர்வுகளை நடத்துவதற்கான வரைவில் இருந்து பஞ்சாபி மொழியை நீக்கியதாக மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் குற்றம்சாட்டிய நேரத்தில் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளையில், இதுகுறித்து சிபிஎஸ்இ தனது விளக்கத்தில், வரைவு தேதி தாளில் உள்ள பிற பாடங்கள் மற்றும் மொழிகளின் பட்டியல் மட்டுமே சுட்டிக்காட்டுவதாகவும், தற்போது வழங்கப்படும் அனைத்து பாடங்களும் மொழிகளும் 2025-2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் பஞ்சாபி மொழியும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இருந்தபோதும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை தவிர ஆண்டுக்கு இருமுறை தேர்வு உள்ளிட்டவை மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல் என்று பல்வேறு மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்கள் மட்டுமே எதிர்த்து வந்த நிலையில் தற்போது பஞ்சாபிலும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.