நாகர்கோவில்

ன்று மாலை நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1,18,950 ரொக்கம் சிக்கி உள்ளது.

கன்யாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக காவல்துறையினர் சுங்கச் சாவடி, போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.  அவ்வகையில் இன்று மாலை சுமார் 4 மணிக்கு நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

அவர்கள் கன்யாகுமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுடன் குழுவாக அலுவலரின் அறைக்குள் நுழைந்துள்ளனர்.  அங்கு நின்ற பணியாளர்கள் மற்றும் தரகர்கள் வெளியே ஓட முயற்சி செய்துள்ளனர்.  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களைப் பிடித்து அலுவலர் அறை அருகே நிறுத்தி உள்ளனர்.  ஒரு சில தரகர்கள் தங்களிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் பணத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்துள்ளனர்.

காவல்துறையினர் அவற்றைக் கைப்பற்றி உள்ளனர்.  நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரியின் மேஜை, பீரோ ஆகியவற்றில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் கிடைத்துள்ளது.   தவிர அலுவலக அறைகள், வளாகம், அலுவலகத்தை ஒட்டி இருந்த புதர் பகுதிகளில் நடந்த சோதனையிலும் ஏராளமான ரொக்கப்பணம் கிடைத்துள்ளது.

இவ்வாறு மொத்தம் ரூ.1,18,950 ரொக்கம் சிக்கி உள்ளது.   இதையொட்டி போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.