சென்னை: 
ரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முந்தைய ஆட்சியாளர்கள், அவருக்கு உதவிய அரசு அதிகாரிகளைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல் என 38 இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், வருவாய்த் துறை அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் எனப் பல துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 26 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகச் சிவகங்கையில் ஒரே அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 8 இடங்களில் சோதனை நீடிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அரசு அதிகாரிகள் பலரிடமும் பரிசுப் பொருட்களாக லஞ்சத்தை வாங்குவார்கள் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.