சென்னை

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி நகர் சத்யா இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யநாராயணன் (சத்யா). சென்னை உயர்நீதிமன்றத்தில்  சத்யா வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது புகாருக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று அதிகாலை முதல் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சத்யாவின் வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தி வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் வடபழனி, நெற்குன்றம் உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர், கோவையில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.