சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை மற்றொரு வேட்பாளர் தட்டிப்பறிக்கும்  காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து மற்றொருவர் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முடிவுகளை உடனடியாக அறிவிக்க கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம்,   வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நேற்று நள்ளிரவு உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில், திருமதி தேவி எஸ்.மாங்குடி, திருமதி  பிரியதர்சினி அய்யப்பன் ஆகிய இருவர் போட்டியிட்டனர்.  தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில்,  திருமதி தேவிமாங்குடி வெற்றி பெற்றதாக அவருக்கு தேர்தல் அலுவலர் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார். அப்போது, அங்கு வந்த பிரியதர்ஷினி வாக்குவாதம் செய்து, தேவி மாங்குடியிடம் இருந்து சான்றிதழை பிடுக்கி உள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர், பிரியதர்ஷினி வெற்றிப் பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். காசு, பணம், துட்டு, மணி, சம்திங் சம்திங் என்றும், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்

ஆனால், மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் சங்கராபுரம் வேட்பாளர் வெற்றி விவரம் அறிவிக்கப்படவில்லை என்றே  முற்பகல் 11 மணி வரை பதிவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.