சண்டிகர்:

வேளாண் உற்பத்தி பொருள் விலை நிர்ணயத்தில் மோசடியான அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்ஜெட் குறித்து பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர் சிங் மேன் கூறுகையில், ‘‘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும் என்று அருண்ஜெட்லி மீண்டும் ஒரு ஏமாற்று விளையாட்டை ஆடியுள்ளார்.

விவசாயிகளுடனான முரட்டுத்தனமான விளையாட்டிற்கு அவர் முயற்சி செய்துள்ளார். உற்பத்தியின் அடக்க விலை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளது. வல்லுனர்களும், பொருளாதார நிபுணர்களும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

2017&18ம் ஆண்டின் கோதுமை ஒரு குவின்டாலின் உற்பத்தி விலை ஆயிரத்து 256 ரூபாய் என்றும், மற்றொரு முறையில் ரூ. 817 என்றும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பாகவும், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையிலும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘இதில் இருந்து 50 சதவீதம் உயர்வு என்றால் ஆயிரத்து 884 ரூபாய் என்றும், மற்றொரு முறையில் ஆயிரத்து 225 ரூபாயாகும். இந்த ஆண்டில் குறைந்தபட்ச விற்பனை விலையாக ஆயிரத்து 735 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என்ற ஏமாற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏற்கனவே விவசாயிகளுக்கு ரூ. 510 தான் குறைந்தபட்ச விற்பனை விலையாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டே அடக்க விலையை விட 43 சதவீதம் கூடுதலாக வழங்குவதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால், உண்மையிலேயே ஒரு குவின்டால் கோதுமை உற்பத்திக்கு 2 ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 700 ரூபாய் வரை உற்பத்திக்கு செலவாகிறது. அதனால் விவசாயிகள் உண்மையான அடக்க விலையில் இருந்து 50 சதவீத உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், அடக்க விலையை நிர்ணயம் செய்யும் பொருளாதார நிபுணர்களிடம் எனது 5 ஏக்கர் நிலத்தை தருகிறேன். அதில் அவர்கள் 2 ஆண்டுகள் சாகுபடி செய்து அவர்கள் கூறும் லாபத்தை ஈட்டி காட்டட்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இதற்கு பதில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

பாரதீய கிசான் சங்க பஞ்சாப் மாநில தலைவர் பால்தேவ் சிங் கூறுகையில்,‘‘விவசாய கடன் திட்டங்களுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது விவசாயிகளை மேலும் கடனாளியாக்கும் செயலாகும். இந்த கடனை கொடுக்க வங்கியாளர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இதனால் இயலாத விவசாயிகள் கடனை பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.