காஞ்சிபுரம்: அண்ணா 115வது பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் பிறந்த நாளான இன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக, காஞ்சிபுரம் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழிநெடுகவும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள அண்ணா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக முதலமைச்சரால் காஞ்சியுல் தொடங்கி வைக்கப்பட்டது.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்! தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்! எண்ணித்துணிவோம்! இந்தியாவை மீட்கும் வேட்கைத் #தீ_பரவட்டும் நாடெங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில்,  பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று, திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை, அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன் என எழுதினார்.