சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு  உயர்த்தியுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு திடீரென சான்றிதழ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், புதிய கட்டணங்களில், கிரேடு மதிப்பெண் நகல் சான்றிதழை பெறுவதற்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு நிறைவு செய்ததற்கான நகல் சான்றிதழை பெறுவதற்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

2-வது முறை நகல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், அதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது.

மேலும், இந்தியாவிற்குள் உள்ள நிறுவனங்களின் சான்றிதழ் உண்மைத்தன்மை குறித்து அறிய 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 23 பணிகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய கட்டணம் கடந்த 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின், இந்த திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சான்றிதழ்களுக்கான புதிய கட்டணமாக 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரங்கள் அடங்கிய அசல் சான்றிதழின் இரண்டாம் பிரதி பெற, 3,000 ரூபாய்; ஒருங்கிணைந்த கிரேடு மதிப்பெண் சான்றிதழின் இரண்டாம் பிரதிக்கு, 5,000 ரூபாய் மற்றும் பட்ட சான்றிதழின் அசல் பிரதி பெற 10,000 ரூபாய் தற்காலிக பட்டச் சான்றிதழில் திருத்தம் செய்ய, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பட்ட சான்றிதழில் மாதம் மற்றும் ஆண்டு குறிப்பிட, 300 ரூபாய்; உண்மை தன்மை சான்றிதழுக்கு இந்திய நிறுவனங்கள் என்றால், 2,000 ரூபாயும் வெளிநாடுகள் என்றால் 100 இந்திய மதிப்பில், 7,500 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.