சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழல் மற்றும் கடைஅடைப்பு, தூத்துக்குடி கலவரம் போன்ற காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற இருந்த தேர்வுகள்  தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி வன்முறை காரணமாக 5 நாட்களுக்கு இணையதள சேவையை தமிழக அரசு முடக்கி உள்ளது. இந்நிலையில், அண்ணா பலைக்கலைக்கழக தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

எதிர்பாராத சூழலால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று (25ம் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள், வரும் ஜூன் 5-ஆம் தேதிக்கு, 26ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் வரும் ஜூன் 6-ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்  28ம் தேதி திங்களன்று நடைபெறும் தேர்வுகள் ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறபபட்டுள்ளது.

அதுபோல,  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மறு கூட்டலுக்கு 26-ம் தேதி வரையே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், இணையதள வசதி நிறுத்தப்பட்டுள்ளதாலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களிலும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடிய வில்லை என பதற்றம் அடைய வேண்டாம் என்றும், இயல்பு நிலை திரும்பிய அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.