டில்லி:

லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரி பிரபல சமூக சேவகரான அன்னா ஹாசரே தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று மீண்டும் தொடங்குகிறார்.

ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த நிலையில், இன்று மீண்டும் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

வலுவான ஜன் லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரியும், வேளாண்மை உற்பத்திக்கான செலவை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, அன்னா ஹசாரே டெல்லியில் இன்று தொடங்க உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க , ஜன் லோக்பால் எனும் மசோதாவை  அமல்படுத்த வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் 11 நாள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, உண்ண விரதத்தை கைவிட்ட அவர், தற்போது மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

அன்னாஹசாரே போராட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த  அரசியல் சாராத விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக  இன்று காலையில் ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அண்ணா ஹசாரே மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பேசிய  அன்னா ஹசாரே,  “பிரதமர் மோடி லோக்பால் மசோதாவை கண்டு கொள்ளவே இல்லை.. ஆனால்,  ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பொய் கூறிவருகிறார்” என்று குற்றம் சாட்டிய நிலையில், செய் அல்லது செத்துமடி என்ற நோக்கத்துடன்  23ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாகவும் அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.