சென்னையின் மையப்பகுதியான ஜெமினி அருகே உள்ள அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

1973 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட இந்த பாலம் அப்போது இந்தியாவிலேயே மிக நீண்டபாலமாக விளங்கியது.

இதற்கு முன் இந்தியாவில் இரண்டு மேம்பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது ஜெமினி ஸ்டூடியோ அருகில் அமைந்த இந்த மூன்றாவது பாலம் ஜெமினி மேம்பாலம் என்றே பெரும்பாலும் அறியப்பட்டது.

66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 21 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட 500 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி திறந்து வைத்தது மட்டுமல்லாமல் இந்த பாலத்திற்கு அண்ணா-வின் பெயரையும் சூட்டினார்.

சென்னை மாநகராட்சி மன்றத்தில் 1948-49 காலகட்டத்திலேயே மவுண்ட் ரோட்டில் தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை, நுங்கம்பாக்கம், கதீட்ரல் சாலை சந்திப்பில் ஓர் மேம்பாலம் கட்டப்படவேண்டும் என்று பேசப்பட்ட போதும் 1960 ம் ஆண்டுக்குப் பின்னரே இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.

1969 ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபின்னரே மேம்பாலம் கட்டுவது உறுதியானது மட்டுமல்லாமல் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட திட்டமாக இது விளங்குகிறது.