சென்னை,

ண்டாள் சர்ச்சை தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் காவல் நிலையத்தில், ராஜபாளையம் இந்து முன்னணி நகர செயலாளர் சூரி  கொடுத்த புகாரின் பேரில் 153 (A), 295 (A), மற்றும் 505 (part II) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சென்னையில் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.  மேலும்,சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், வைரமுத்து மீது கொடுத்துள்ள புகாரை தொடர்ந்து  சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் வைரமுத்து மீது  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் பிரமுகர் வேணுகோபால் கொடுத்த புகாரையடுத்து,  ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ஆர்.கே நகர் காவல்நிலையத்திலும் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, கவிஞர் வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண்டாள் சர்ச்சை காரணமாக  தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதி மன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன.