மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட  ஆனந்த் சுப்பிரமணியம்தான் என டெல்லி  நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்து உள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழு இயக்க அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் “இமாலய யோகி” போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும்,  முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணா எடுத்த முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று (11ந்தேதி) சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரபபை ஏற்படுத்திய தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செபி நடத்திய விசாரணையில் சித்ரா இமயமலையில் தங்கி இருக்கும் சாமியார் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவுகள் எடுப்பது தெரிய வந்தது. இந்த ஆலோசனைகள் அனைத்தும் இமெயில் மூலமே நடந்துள்ளது. சாமியாருக்கும் சித்ராவுக்குமிடையே நடந்த 2,500 இமெயில் பரிமாற்றங்களை விசாரணை அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

சித்ரா தேசிய பங்குச் சந்தையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் நியாயமான முறையில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேரைப் பயன்படுத்த அனுமதிக்க ல்லை என்று செபி குற்றம் சாட்டியிருந்தது. தேசிய பங்குச் சந்தையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் மர்ம சாமியாரிடம் சித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து சித்ராவிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியபோது கடந்த 20 ஆண்டுகளாக சாமியார் தன்னை வழிநடத்தி வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மட்டும் அவரை சந்தித்து பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு ஆனந்த் சுப்பிரமணியன் தன் தோழியின் கணவர் என்று மட்டும் சித்ரா விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு 1,000 கோடி ரூபாய் அபராதமும், சித்ரா மற்றும் ரவி நாராயண் ஆகியோருக்கு சம்பளத்தில் 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால், சித்ராவுடன் பணியாற்றிய ஒரு அதிகாரி இது குறித்து கூறுகையில், “சித்ராவுக்கு ஆனந்த் சுப்பிரமணியனை முன் கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அதோடு இருவருக்கும் மர்ம சாமியார் குருவாக இருந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தேசிய பங்குச் சந்தையில் சுப்பு என்று அழைக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனும், மர்ம சாமியாரும் சித்ராவும் சேர்ந்து பணம் சம்பாதிக்க இது போன்று பங்குச் சந்தை ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்களா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

சித்ராவும் அவருக்கு முன்பு அப்பதவியில் இருந்த ரவி நாராயணும் சேர்ந்து 5 ஆண்டுகளில் யாரோ ஒருவர் பங்குச் சந்தையில் 60,000 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்ட உதவி செய்து இருப்பதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவித்தார். சித்ராவும், ரவி நாராயணும் பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கொடுத்து மர்ம நபர்கள் லாபம் அடைய உதவி செய்திருப்பதாகவும் பங்குச் சந்தை தரகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் நள்ளிரவில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். மார்ச் 6-ம் தேதி சித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரிடமும் மூன்றாவது நபர் யார் என்று சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விசாரணையின் முடிவில் மர்ம சாமியார் யார் என்பது  தெரிய வந்துள்ளது. சித்ரா கூறிய இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன்தான் என்பதை சிபிஐ கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, டெல்லி நீதிமன்றத்தி சிபிஐ நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வழக்கின் விசாரணையின்போது கருத்து தெரிவித்த டெல்லி  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சஞ்சீவ் அகர்வால்,  “இந்தியாவில் இதுபோன்ற மோசடிகள் நடந்தால் யார் முதலீடு செய்வார்கள்?” என்எஸ்இ  ஊழல் வழக்கில் சிபிஐ தாமதமான விசாரணையை கண்டித்துடன், இது சிபிஐக்குக்கும்,  நாட்டின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியது.

இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவது போல தெரிவதாக கூறிய நீதிபதி,  இது பல வருடங்கள் தொடருமா?  சிபிஐ விசாரணை பல வழக்குகளில்  பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இனால் நம்மீதான நம்பகத்தன்மை எல்லாம் போய்விடும். அவர்கள் (முதலீட்டாளர்கள்) அனைவரும் சீனா செல்வார்கள்” என்று சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கூறினார்.

“மக்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். NSE நியாயமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மீன்பிடித் தொழில் நடக்கிறது என்று தெரிந்தால், யார் பணத்தை முதலீடு செய்வார்கள்? இந்த விசாரணையை நீங்கள் மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று நீதிபதி சிபிஐ கண்டித்தார்.

இதற்கிடையில் ஆனந்த்  சுப்ரமணியன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், மார்ச் 24ஆம் தேதி தனது உத்தரவை அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.