னந்த், குஜராத்

குஜராத் அமுல் பால் தொழிற்சாலையில் நடந்ததாக கூறப்படும் ரூ. 450 கோடி ஊழல் புகாரைத் தொடர்ந்து குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி நிர்வாக இயக்குனர் ரத்தினம் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

குஜராத் பால் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தி வரும் கூட்டுறவு  பால் தொழிற்சாலை ஆனந்த் நகரில் அமைந்துள்ளது.   ‘அமுல்’ மற்றும் ’சாகர்’  என்னும் பெயர்களில் இந்த கூட்டுறவு நிறுவனம் பால் பொருட்களை நாடெங்கும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் ஊழல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.    ஒப்பந்தங்கள் அளிப்பதிலும்,  வேலை வாய்ப்புகள் அளிப்பதிலும் சுமார் ரூ.450 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.    இதற்கான விசாரணை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.   ஆனால் அமுல் நிறுவனம் இதை வதந்தி எனக் கூறி மறுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டதாக நிறுவனத்தின் தலைவர் ராம்சிங் பர்மார் தெரிவித்துள்ளார்.   மேலும் ஊழல் பற்றிய தவறான செய்திக்கும் ரத்தினத்தின் ராஜினாமாவுக்கும் சம்மந்தம் இல்ல்லை எனவும் அவர் தனது குடும்ப சூழ்நிலையினால் பதவி விலகுவவதாகவும் பர்மார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரத்தினம் “எனக்கு 55 வயதாகிறது.  எனது குடும்பத்தினர் அமெரிக்காவிலும் தமிழ்நாட்டிலும் வசித்து வருகின்றனர்.   நான் அவர்களுடன் சேர்ந்து வசிக்க எண்ணுகிறேன்.    நான் இந்த நிறுவனத்தில் 22 வருடங்கள் பணி புரிந்துள்ளேன்.   இதுவரை நான் எனக்கோ எனது குடும்பத்திற்காகவோ எதுவும் செய்யவில்லை.  இனி எனது குடும்பத்துக்காகவும் எனக்காவும் வாழ்நாளை கழிக்க முடிவு செய்துள்ளேன்”  என தெரிவித்துள்ளார்