சென்னை:
அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக டிடிவியால் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வி.பி.கலைரான், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமாக இருந்தவர். அதிமுக இரண்டாக உடைந்தபோது, டிடிவிக்கு ஆதரவாக ஓபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசினார். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதையடுத்து டிடிவி அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் வி.பி. கலைராஜன். அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வி.பி.கலைராஜன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக டிடிவி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘வி.பி.கலைராஜன் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வி.பி.கலைராஜன் திமுகவுக்கு தாவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.