அம்மா குடிநீர் விற்பனை திட்டம் முடங்கியது….! அம்மா உணவகம் எப்போது….?

Must read

சென்னை: சென்னை உள்பட தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது.  குறைந்த விலையில் பேருந்து பயணிகளின் வசதிகளுக்காக பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் பாட்டல் விற்பனைக்கு திமுக அரசு மூடு விழா நடத்திவிட்டது. இதையடுத்து, மக்களின் வரவேற்பை பெற்ற அம்மா உணவகம் எப்போது மூடப்படுமோ என்ற அச்சம் ஏழை மக்களிடையே எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத்ததிட்டங்களில் பெரும் வரவேற்பை பெற்ற திட்டங்களாக அம்மா உணவகமும், அம்மா குடிநீர் விற்பனை திட்டமும் செயல்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்று அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, 10 ரூபாய்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அம்மா குடிநீர் திட்டத்திற்கான ஆலை, கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் தொடங்கப்பட்டது. சுமார் 10.5 கோடி மதிப்பீட்டில்  2.47 ஏக்கர் பரப்பளவில் தொடங்கிய தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கி தண்ணீர் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் விற்பனை பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் நடமாட்ட அதிகம் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதும் 377 இடங்களில் விற்பனை மையங்கள் செயல்பட்டு வந்தது.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அடுத்து வந்த முதல்வர் எடப்பாடியால், இந்த திட்டங்கள் தொடர்ந்து வந்தாலும், அதில் முழுமையான கவனம் செலுத்தவில்லை.  இந்த நிலையில், தற்போது திமுக அரசு, அம்மா குடிநீர் திட்டத்தை அடியோடு மூடி உள்ளது.  கும்மிடிப்பூண்டியில் இருந்த ஆலை  மூடப்பட்டு, குளிர்பதன கிடங்குகளாக மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் விற்பனை பங்குகள் அனைத்தும் படிப்படியாக மூடப்பட்டு, அது பேருந்து நேரக்காப்பாளர் அறைகளாக மாற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது.

மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள அம்மா குடிநீர் திட்டத்தை, வேறு பெயரிலாவது நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர், நிலத்தடி நீர் குறைந்ததால் உற்பத்தி  குறைந்ததாகவும், அதுபோல விற்பனை குறைந்து என்றும், மேலும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பழுது ஏற்பட்டதாலும் ஆலை மூடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரியோ, கும்மிடிப்பூண்டி குடிநீர் உற்பத்தி ஆலை மூடப்படவில்லை. உற்பத்தி நிலையத்தில் உள்ள எந்திரங்கள்  செயலிழந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டு  செயல்படாமல் உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

ஏழை எளிய மக்களின் தாகத்தை தீர்த்த அம்மா குடிநீர் திட்டத்துக்கு மூடு விழா நடத்திய திமுக அரசு,  அம்மா உணவகத் திட்டத்துக்கு எப்போது மூடு விழா நடத்தபோகிறதோ என ஏழை மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article