ஐதராபாத்:

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில் இருந்து அக்கட்சியின் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்திரபாபு நாயுடுவுக்கு 9 பக்கங்கள் அடங்கிய ஒரு கடிதம் எழுதினார். அதில்,‘‘ ஆந்திராவின் வளர்ச்சிக்காக இல்லாமல் அரசியலுக்காக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது எதிர்பாராதது. ஒருதலைபட்சமானது’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆந்திரா முதல்வரும், தெலுங்கு சேத கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ அந்த கடிதத்தில் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகள் இடம்பெற்றுள்ளது. இதில் பாதி உண்மை. பாதி பொய் உள்ளது. இது எனக்கு எழுதப்பட்ட கடிதம் கிடையாது. ஆந்திராவின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நான் 4 ஆண்டுகள் வரை காத்திருந்தேன். 29 முறை டில்லிக்கு சென்றேன். நான் என்ன செய்திருக்கிறேன் என்று தெரிய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதங்களை பாருங்கள். இதில் அரசியல் கிடையாது. மாநிலத்தின் நலன், மக்களின் உணர்வு சார்ந்தது. இது தான் எங்களை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற செய்தது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஆந்திரா துன்பப்படுவதற்கு யார் காரணம்?. நாங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறோம். முதலீடுகளை எதிர்பார்க்கிறோம். இதற்கு மத்திய அரசு உதவினால் நாங்கள் மேலும் முன்னோக்கி செல்ல உதவும். அமித்ஷாவின் கடிதம் தவறான தகவல்களால் நிரம்பியுள்ளது. இப்போது கூட வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

அதே போல் ஆந்திராவுக்கு கொடுத்திருந்தால் பல தொழிற்சாலைகள் மாநிலத்திற்கு வந்திருக்கும். அவரது கடிதத்தில் மாநிலத்திற்கு மத்திய அரசு பல நிதிகளை வழங்கி உள்ளது என கூறி உள்ளார். அவற்றை நாம் பயன்படுத்த முடியாது.

ஆந்திரப் பிரதேச அரசு திறமையற்றது என்று அவர்கள் கூற முயற்சிக்கின்றனர். எங்கள் அரசில் விவசாயத்தில் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளது. எங்கள் திறமைக்கு பல தேசிய விருதுகள் கிடைத்து உள்ளன. நீங்கள் ஏன் பொய்களை பரப்புகிறீர்கள்?’’என்றார்.