எங்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்ட அமித்ஷா எங்களுடன் பேசவில்லை! நாட்டுப்புறப் பாடகர் பசுதேப் தாஸ் குற்றச்சாட்டு…

Must read

கொல்கத்தா: 2நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்ற உள்துறை அமைச்சர், அங்குள்ள ஏழை பாடகர் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில், எங்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்ட அமித்ஷா, எங்களுடன் பேசவில்லை என அவருக்கு விருந்தளித்த  நாட்டுப்புற பாடகர்  பசுதேப் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  மற்றொரு புறம் நாடு முழுவதும  இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த சூழலில், 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அங்குள்ள விவசாயி ஒருவர் வீட்டில், தரையில் அமர்ந்து  உணவு உட்கொண்டார். விவசாயிகள் உடனான பாஜகவின் உறவை பலப்படுத்தும் உத்தியாகப் பார்க்கப்படும் இம்முயற்சி குறித்து பல இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அமித்ஷாவுக்கு விருந்துகொடுத்த நாட்டுப்புற பாடகரான பாடகர் பசுதேப் தாஸ்,  அமித்ஷா தங்களிடம் ஏதும் பேசவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.  அரசு ஏற்கனவே எங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது, இருந்தாலும்,  சமீபத்தில் எம்.ஏ. தேர்ச்சி பெற்ற எனது மகளின் கல்விக்கு நிதியளிக்க நான் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைப் பற்றி அவருக்கு தெரிவிக்க விரும்பினேன். ஆனால், அவர் ஏதும் பேசவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, அவரை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர், டிசம்பர் 29 அன்று மாவட்டத்திற்குள்  முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேரணியில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article