17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ளது. மோடி தலைமையில் மிருக பலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பது எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில் பாரதியஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்படாததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலக்கட்சிகளை திட்டமிட்டு ஒதுக்க பாஜக திட்டமிடுகிறதோ என்ற  சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பதவி ஏற்ற மோடி தலைமையிலான 58 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் அதிமுக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ்குமார் தனது பங்குக்கு கருத்து கூறிவிட்டு டில்லியில் இருந்து புறப்பட்டு பீகாருக்கு சென்றுவிட்ட நிலையில், அமைச்சர் பதவி கண்டிப்பாக கிடைக்கும் என ஆவலோடு அலைந்த அதிமுக தலைவர்களுக்கு அவமதிப்புதான் கிடைத்துள்ளது.

பதவி ஏற்புக்கு முன்னதாக  அமைச்சர் பதவி குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுகவை அழைக்காமல் விட்டபோதே, அமித்ஷாவின் குள்ளநரித்தனம் தெரிய வந்தது.

இருந்தாலும், பதவி ஏற்புக்கு முன்னதாக நடைபெறும் டீ பார்ட்டிக்கு அதிமுக எம்பி  ரவீந்திர நாத்துக்கு மோடி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும் குஷியான ஓபிஎஸ் அன்ட் கோவினர், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்த்த நிலையில், புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியலில் அதிமுகவை சேர்ந்த ஒருவரது பெயரும் இல்லாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் மோடிக்கு சாமரம் வீசிவிட்டு வந்த நிலையில், அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி கேட்டு அடித்தளம் போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதிமுகவின் கோரிக்கையை பாஜக முற்றிலும் புறந்தள்ளி இருப்பது பல்வேறு கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா மற்றும் 22 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதுபோ அதிமுக மற்றும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் அதிர்ச்சிகரமான தோல்விகளை மட்டுமே சந்தித்தன. ஓபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது. இது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே அதிக கவனம் செலுத்தியதாகவும், லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தவில்லை என்றும், இதன் காரணமாக மாபெரும் தோல்வியை சந்தித்ததாக பாஜக உள்பட கூட்டணி கட்சியினரும் அதிமுக மீது தோல்விக்கு பழிபோட்டு வருகின்றனர். அதையே பாஜக தலைமையும் ஏற்றுக்கொண்டு, அதிமுகமீது செம கடுப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவி கேட்டு ஈபிஎஸ் ஒருபுறமும், தனது மகனுக்கு பதவி கேட்டு ஓபிஎஸ் ஒருபுறமும் பாஜக தலைவர்களை தொடர்புகொள்ள , பாஜக தலைமை மேலும் கடுப்பானது. கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி என்று பாஜக தெரிவித்து வந்த நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும், தலா 1 அமைச்சர் பதவி என 2 அமைச்சர் பதவி கேட்டு தொல்லைபடுத்தியதால் கோபமடைந்த அமித்ஷா, அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி அரப்பில் மாநிலங்களை எம்.பி. வைத்திலிங்கத்தை முன்னிலைப்படுத்தியும், ஓபிஎஸ் தரப்பில் அவரது மகன் ரவீந்திரநாத்தையும் முன்னிலைப்படுத்தியும் அமைச்சர் பதவி கேட்டு வந்தனர்.

டில்லியில் யாருக்கு செல்வாக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ் ஆகியோர் தங்களது  வீரதீர பராக்கிரமங்கள் மூலம் டில்லியில் முகாமிட, இறுதியில் இருவருக்குமே அல்வா கொடுத்துள்ளது  பாஜக தலைமை. வட போச்சே என்ற வடிவேலு பாணியில் அதிமுக தலைமை நொந்து நூலாகி உள்ளது.

இதன் காரணமாக ஈபிஎஸ் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு தமிழகம் திரும்ப, ஓபிஎஸ் இன்னும் டில்லியிலேயே முகாமிட்டு உள்ளார். மோடி, அமித்ஷா காலில் விழுந்தாவது தனது மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்க பகிரத பிரயத்தனம் செய்து வருகிறார்…  அதிமுக தலைவர்களுக்கு காலில் விழுவது ஒன்றும் புதிது இல்லையே….

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,மீதமுள்ள இரண்டு ஆண்டு கால ஆட்சியையும் பாஜக ஆதரவுடன் ஓட்டி விடலாம் என்று கனவு கண்டு வரும் அதிமுக அரசு, பாஜக தலைமையின் புறக்கணிப்பால் பீதி அடைந்து உள்ளது.  முதல்வர் உள்பட அமைச்சர்கள் தங்களது ஆட்சி நீடிக்குமா என்று பிதற்ற தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பணியாற்றுவதாக கூறிக்கொண்டாலும், இவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவிக்கு இருவரும் மோடிக்கொண்டது அதிமுக மூத்த தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக தலைமைகளுக்கு இடையே உள்ள மோதல், பாஜகவின் புறக்கணிப்பு போன்றவற்றால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற கருத்து அதிமுகவினரிடையே நிலவி வருகிறது.  இதை உறுதிப்படுத்துரும் விதமாகவே நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி தன்னை சந்தித்த நகராட்சி ஆணையர்களிடம், நாங்களே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறோம்… என்று  புலம்பியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக தலைவர்  ஸ்டாலின் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நாங்கள் யார் என்பதை காட்டுவோம் என மிரட்டி உள்ள நிலையில், தற்போதைய பாஜக தலைமையின் புறக்கணிப்பு எடப்பாடி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.