மைசூரு

மைசூருவை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா அமித்ஷாவைப் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த பா ஜ கவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா.  இவர் யுவ மோர்ச்சா என்னும் பாஜக இளைஞர் அணித் தலைவராகவும் உள்ளார்.  இவர் பாஜக தலைவர் அமித்ஷா வைப் பற்றி பேசியதாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியது.  அந்த வீடியோ  வாட்ஸ்அப் மூலம் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

பிரதாப் சிம்ஹா

அந்த வீடியோ நவம்பர் 30 ஆம் தேதி பிரதாப் சிம்ஹா முகநூலில் வெளியிட்ட லைவ் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதைப் போல தெரிய வருகிறது.  சுமார் 37 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பிரதாப் சிம்ஹா தானும் பாஜக இளைஞரணி உறுப்பினர்களும் அமித்ஷாவை சந்தித்ததைப் பற்றி பேசுவது போல் அமைந்துள்ளது.  அதில் ”அமித்ஷா யுவ மோர்ச்சா கர்னாடகாவில் எத்தனை போராட்டங்கள் நிகழ்த்தியுள்ளன எனக் கேட்டார்.  நாங்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி சொன்னோம்.  நீங்கள் தீவிர போராட்டங்கள் நடத்தி அதில் வன்முறை ஆகி தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு ஆகியவை நடந்துள்ளதா எனக் கேட்டார்.  அவ்வாறு நடைபெறவில்லை என நாங்கள் தெரிவித்ததும் அது போல போராட்டங்கள் நடத்துமாறு எங்களிடம் அமித்ஷா கூறினார்” என தெரிவித்துள்ளார்.

தற்போது ஹன்சூரில் நடைபெற இருந்த ஹனுமான் ஜெயந்தி விழாவில் கலந்துக் கொள்ள பிரதாப் செல்லும் போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வழியில் கைது செய்யப்பட்டார்.  அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரங்கள் நிகழ்ந்தது.  அந்த விழாவில் போலீசார் தடியடி நடத்தினர்.   அந்த தடியடி சம்பவம் நடந்த பிறகு பிரதாப் சிம்ஹா பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து பாஜக தலைவர் எடியூரப்பா. “அமித் ஷாவின் பேச்சை பிரதாப் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்.  அமித்ஷா பொதுமக்களின் துயரங்களைப் போக்க கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டும் என கூறி உள்ளார்.” என தெரிவித்தார்.  கர்னாடகா முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “அமித்ஷாவின் அறிவுரைப்படி மைசூரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மதவாத கலவரத்தை அனுமன் ஜெயந்தி அன்று தூண்டி விட திட்டமிட்டிருந்தார்.   எந்த ஒரு விழாவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமலும் நடத்துவது அரசின் கடமை.  பாராளுமன்ற உறுப்பினர் உட்பட யாராக இருந்தாலும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக்கொள்வதை அரசு அனுமதிக்காது” என தெரிவித்துள்ளார்.