டெல்லி

பெங்களூருவில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. பெங்களூருவில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க இது ஒன்றே வழி என அரசு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. எனவே அணைக் கட்டுமான பணிகளுக்கு அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் கடந்த கூட்டத்தில் (மார்ச் 21 -ந் தேதி) பெங்களூரு நகர குடிநீர்த் தேவைக்காகக் காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க அந்த மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். தமிழக அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழகத்துக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காகத் தலா 2.8 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை காவிரி ஒழுங்காற்றுக் குழு கேட்டுக்கொண்டது.

இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த அழைப்பில் ஆணைய செயல்பாட்டுக்கான நிதியும் 4 மாநிலங்களிடமும் கோரப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசு இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பெங்களூருவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என வலியுறுத்தும் எனவும், தற்போது நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரைத் திறந்து விட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.