வாஷிங்டன்: 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமெரிக்க விண்கலம் முதன்முதலாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒடிசியல் என்ற பெயரிலான இந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.

முதன்முதலாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது.  1969 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முதலில் கால் பதித்து உலக வரலாற்றில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து, இந்தியா உள்பட பல நாடுகள் நிலவினை நோக்கி  விண்கலங்களை அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில், சுமார் 50ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து தனியார் விண்கலம் ஒடிசியஸ் நிலவுக்கு சென்று வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.  1972க்கு பிறகு தற்போது மீண்டும் முதன்முறையாக அமெரிக்க விண்கலம் சந்திரனில் தரையிறங்கி உள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான  நாசா, தனியார் நிறுவனமான இன்ட்யுட்டிவ் மெஷின் உடன் இணைந்து, தற்போது நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டாலும், தென் துருவப் பகுதியில் இருந்து அது அனுப்பும் சிக்னல் பலவீனமாக உள்ளது என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசியஸ் எங்கு தரையிறங்கியது?

நிலவின் தென் துருவத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற பள்ளத்தில் ஒடிசியஸ் தரையிறங்கியது. இது நிலவின் ஆராயப்படாத மற்றும் ஆபத்தான பகுதியாகும். இந்த பகுதிக்கு சார்லஸ் மலாபெர்ட்டின் என பெயரிடப்பட்டுள்ளது. இது வானியல் வரலாற்றின் ஒரு முக்கிய நபராக கருதப்படுபவரின் பெயராகும்.

பிப்ரவரி 15 அன்று கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் பால்கன்-9 ராக்கெட்டில் ஒடிஸியஸ் தனது பயணத்தைத் தொடங்கியது. இது நிலவை நோக்கி, பூமியின் குறுகிய நேரடி பாதையில் செலுத்தபட்டது. இந்தியாவின் சந்திரயான்-3, பூமியைச் சுற்றி வந்து, நிலவை அடைய பல வாரங்கள் எடுத்தது போலல்லாமல், அதை வெறும் எட்டு நாட்களில் சந்திரனுக்கு போகக்கூடிய நேரடி பாதையில் சென்று நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளது.