நீரிழிவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: நோயாளிகளே சுவீட் எடுங்க ! கொண்டாடுங்க !!

Must read

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி மருத்துவர்கள், நீரிழிவுக்கு தடுப்பூசி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக்கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக்கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக்கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை.

இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்குச் சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு.

1.உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய் ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை. இந்த முதல்வகை சர்க்கரை நோய்க்கு ஐடிடிஎம் (Insulin Dependent Diabetes Melitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோயாளிகள் ஆயுள் முழுவதும் இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக் கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி போதிய அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படுவது இரண்டாவது வகை சர்க்கரை நோயாகும். இந்த வகை சர்க்கரை நோய்க்கு என்ஐடிடிஎம் (Non Insulin Dependent Diabetes Melitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோயாளிகள் ஆயுள் முழுதும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும்.
இந்தியாவில் இரண்டாவது வகை சர்க்கரை நோய் காரணமாகப் பாதிக்கப்படுவோர்தான் அதிகம். உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் வந்து விட்டால், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .

“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”

என்று மது மேகத்தைப் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். சித்த மருத்துவர் அருண் சின்னையா இதற்கு விளக்கம் கூறுகையில், “ பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று.
இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய நீரிழிவு என்னும் நோயாகும் என்றார்.
இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது.

இந்தியர்களைப் பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயைச் சர்க்கரை நோய் என்று பொதுப்பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது, முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய், கர்ப்பகால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் உருவாகும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரைநோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு முதல் வகையச் சேர்ந்தது.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளை களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள்80% சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் சுமார் 45 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் (ஏப்ரல் 7,2016 பத்திரிக்கை.காம் செய்தி). கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும், 1.25 மில்லியன் மக்கள் நீரிழிவு வகை-1 நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்திய நாட்டில் தற்போது சுமார் 5.08 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகக் காசநோய்க்கு பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பூசி, தற்போது நீரிழிவு வகை-1 நோயைக் குணப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் தடுப்பூசி பொதுவாக சிறுநீர்ப்பை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது ஒரு பாதுகாப்பான மருந்து எனக் கருதப்படுகிறது.

அமெரிக்க நீரிழிவு சங்கம் நடத்திய 75 வது அறிவியல் அமர்வுகள் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், எஃப்.டி.ஏ. எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அமைப்பு, நீரிழிவு வகை ஒன்றினால் அவதிப்படும் 150 பேரிடம் இந்தத் தடுப்பூசி சோதிக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப் பட்ட ஆய்வில், இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நோயாளிகளின் உடம்பில் தானாக இன்சுலின் சுரக்கத் துவங்கியது. பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இம்யூனோபயாலஜி ஆய்வகம் இயக்குனர் டாக்டர் டெனிஸ் ஃபவுட்மென் கூறுகையில், நீரிழிவு வியாதியைக் குணப்படுத்துவதில் பி.சி.ஜி தடுப்பு மருந்து நல்ல முடிவுகளைக் காட்டுகின்றது என்றார் உற்சாகமாக.

நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் இன்சுலின் ஊசி போட்டுக்கொல்ளும் துயரத்திலிருந்து அவர்களை இந்தத் தடுப்பூசி காக்கும் என்பது உண்மையில் நல்லச் செய்தி தான். எனவே தைரியமாகச் சர்க்கரை நோயாளிகள் “ சுவீட் எடு.. கொண்டாடு..” எனக் குதூகலிக்கலாம்.

More articles

Latest article