உச்சகட்ட போதையில் டிரைவர். குடிசைக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்.

கரூர் மாவட்டம் புலியூரைச் சேர்ந்தவர் முரளி. இவர் ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று வைத்துள்ளார். இவரிடம் டிரைவராக அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், அவருக்கு உதவி டிரைவராக ராகவன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஹரிஷூம் ராகவனும் அளவுக்கதிகமான மது போதையில் ஆம்புலன்ஸை முழுவேகத்தில் கரூர்-திருச்சி சாலையில் தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் அலறி ஓடினர். இதனால் கட்டுப்பாடு இழந்த ஆம்புலன்ஸ் பி.வெள்ளாளப்பட்டி அருகில் சென்ற போது, சாலையின் ஓரமாக இருந்த ஒரு குடிசைக்குள் புகுந்து விட்டது. கூரை வீட்டை உடைத்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்புகள் மேல் மோதி அந்தரத்தில் நின்றுள்ளது.

அந்நிலையிலும் போதை தெளியாத ஹரிஷோ, “யாருடா இப்படி நடுரோட்டுல வீட்டைக் கட்டி வச்சது. நாங்க எப்படி ஆம்புலன்ஸை ஓட்டுறது?” என்று உளறியுள்ளார். ஆம்புலன்ஸ் மோதிய போது வீட்டில் யாரும் இல்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. அதற்குள் அங்கு திரண்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் இருவரும். எனினும் ஹரிஷையும் ராகவனையும் வெளியில் இழுத்துப் போட்டுள்ளனர் அப்பகுதியினர். அத்துடன் பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் ஆம்புலன்ஸை கைப்பற்றி ஹரிஷ், ராகவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் அந்தத் தனியார் ஆம்புலன்ஸின் உரிமையாளரான முரளியை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா