நெட்டிஷன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
ஆரூர் தாஸ்.. அற்புத வசனகர்த்தா..
து வெறும் பெயரல்ல, தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட, ஒரு சகாப்தம்.
அரச கதைகளுக்கும் புராண கதைகளுக்கும் அடுக்கு மொழி வசனங்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த தமிழ் சினிமா, 60களின் துவக்கத்தில் சமூக கதைகளை நோக்கி வேகமாக ஓட்டம் எடுக்க ஆரம்பித்தது.
கலைஞர், சக்தி கிருஷ்ணசாமி போன்றோர் அனல் பறக்கும் வசனங்களால் கோலேச்சிய காலகட்டத்தில், இன்னும் ஒரு பொக்கிஷம் போல் கிடைத்தவர் தான் ஆரூர் தாஸ். சாண்டோ சின்னப்பா தேவரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு தேவர் பிலிம்சில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆருர்தாசுக்கு, பெரிய அளவில் திருப்பு முனை ஏற்படுத்த தந்த படம், நடிகர் திலகத்தின் பாசமலர்.
எம்ஜிஆருக்காக ‘தா’ வரிசை படங்களாய் தேவரும், சிவாஜிக்காக ‘பா’ வரிசை படங்களாய் இயக்குனர் பீம்சிங்கும் வரிந்து கட்டிக்கொண்டு படைப்புகளைத் தந்தபோது இருவரின் படங்களிலும் வசனகர்த்தாவாக பணியாற்றி பலரையும் வியக்க வைத்தவர் ஆரூர் தாஸ். தொழில் போட்டியால் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருந்த எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதுவது என்பது சாதாரண காரியம் அல்ல.
சாவித்திரி-ஜெமினி கணேசன் தம்பதியர் ஏற்படுத்தி இந்த அற்புதமான வாய்ப்பை ஆரூர் தாஸ், தனது எளிமையான வசனங்களால் அழகு படுத்தினார். தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை போன்ற படங்களுக்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் எந்த அளவுக்கு வசனங்கள் நேர்த்தியாக இருக்குமோ இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே வார்த்து கொடுத்தவர்.
1964 ஆம் ஆண்டில் எம்ஜிஆரின் நீதிக்குப் பின் பாசம் படமும் சிவாஜியின் புதிய பறவை படமும் வெளியாகின. இரு படங்களிலுமே கதாநாயகனின் பெயர் கோபால். எம்ஜிஆரின் பாத்திரம் ஆழ்ந்த அறிவும் நிதானமும் கொண்ட வழக்கறிஞர் பாத்திரம். சிவாஜியின் பாத்திரமோ செல்வ செழிப்பில் திளைத்து, அடங்காப்பிடாரி மனைவியை கொலை செய்து விட்டு மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் உணர்ச்சி குவியலின் பாத்திரம். இரண்டு கோபால்களுமே கச்சிதமான வசனங்களால் செதுக்கப்பட்டிருந்தனர். அதிலும் புதிய பறவை (1964) படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு நாடகமே போட்டு சுற்றிவளைத்து பிடித்து விட்ட போலீஸ் கும்பலிடம், சிவாஜி கையறு நிலையில் வாக்கு மூலமாக பேசும் வசனங்கள், ஆரூர் தாஸ் ஒரு சாதாரண வசனகர்த்தா அல்ல என்பதை எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் பறைசாற்றும்.
“அவ்வளவும் நடிப்பா?” என்று சரோஜாதேவி இடம் சிவாஜி கேட்கும் அந்த ஒரு பிரேம்… இதேபோல அன்பே வா. கதாநாயகன் எம்ஜிஆருக்கு இணையான காமெடி பாத்திரத்தில் வரும் நாகேஷுக்கு ஆர்வதாஸ் மெனக்கெட்டு எழுதிய வசனங்கள்,
அற்புதமான சீசன்
அழகான பங்களா
அள்ளிக் கொடுக்க வள்ளல் நீங்க அக்காவும் மாமாவும் அங்க
ஆசைக்குரிய கண்ணம்மா இங்கே
கிளி மாதிரி பொண்ணு
கிட்ட போனா புலி மாதிரி பாயறா
அட போய்யா..
ராமைய்யாவின் அவ்வளவு பெரிய ஆதங்கத்தை இவ்வளவு சுருக்கமாக ஆருதாஸ் தந்த விதம் இன்றளவும் வியப்பின் ரகமே.
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஆரூர்ருதாஸ் வசனம் எழுதியுள்ளார். மோகன், பூர்ணிமா, சுஜாதா,ஜெய்சங்கர்,மனோரமா ஆகியோர் நடித்து 1984-ல் வெளிவந்த விதி திரைப்படம். நீதிமன்ற காட்சிகளுக்காக, கூர்மையான அதே நேரத்தில் மிகவும் ஜனரஞ்சகமான வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்ட படம். திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது அந்த படம். அதைவிட பெரும் வெற்றியாக, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் ஒலிச்சித்திர நாடாக்களாக பல ஆண்டுகளுக்கு ஒலித்தது. வசனங்கள் பொதுவெளியில் அதிக அளவில் ஒலிபரப்பப்பட்ட கடைசி சாதனைப்படம் அதுவாகத்தான் இருக்கும்.
டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஆருர்தாசுக்கு குலோப் ஜாமுன் சாப்பிடுவது மாதிரி. அந்தத் தளத்தில் புகுந்து மனுஷன் ஏராளமான படங்களுக்கு சர்வ சாதாரணமாக எழுதி தள்ளினார். சுமார் ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதினார் என்று ஆரூர்தாஸ் பற்றி தகவல்கள் சொல்கின்றன. நம்மைப் பொறுத்தவரை ஆருர்தாஸை அணு அணுவாக ரசித்துப் பார்த்த படங்கள் பார்த்தால் பசி தீரும் மற்றும் இருமலர்கள். நட்பையும் தியாகத்தையும் மையமாக வைத்து டைரக்டர் பீம்சிங் விளையாடிய பார்த்தால் பசி தீரும் படத்தில் சிவாஜி ஜெமினிகணேசன் சாவித்திரி சரோஜாதேவி சௌகார் ஜானகி என அத்தனை பேருக்கும் பாரபட்சமே இல்லாமல் வசனங்களால் ஒற்றை ஆளாய் தூக்கி நிறுத்தியது ஆருர்தாசின் பேனா.
இருமலர் படத்தில் கே.ஆர்.விஜயா ஏற்றிருந்த. அமைதியும் நுட்பமான அறிவும் பொருந்திய சாந்தி என்ற பாத்திரம், வியப்பின் உச்சம் அது. தூக்கம் வராமல் நடுராத்திரியில் எழுந்து போய் கவலையில் தவிக்கும் கணவனை நீண்ட நேரம் கவனித்து பின் தொடர்ந்து சென்று மனைவி கேட்கும் ஒரே வார்த்தை ஒரே கேள்வி, “யார் அந்த பெண்?” வேறு வசனகர்த்தாவாக இருந்திருந்தால், அந்த இடத்தில் பக்கம் பக்கமாய் எழுதி தள்ளி இருப்பார்கள்.
குடும்பக்கதை பாத்திரங்களுக்கு எந்த அளவுக்கு வசனம் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்து அதை சாதனையாகவே செய்தவர் ஆரூர் தாஸ். எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் கொடி கட்டி பறந்து வாழ்ந்து வந்த ஜாம்பவான்களில், அரூர் தாஸ் மிக மிக முக்கியமானவர். கடந்த ஆண்டு இதே நாளில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.