சென்னை: தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” (Anti Terrorism Squad) அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்தியஅரசு சிபிஐ மற்றும் என்ஐஏ போன்ற உளவு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்பினர் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், என்ஐஏ அமைப்பினர் அடிக்கடி வந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்துவதுடன், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பலரை கைது செய்தும் வருகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்க  தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான  அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடந்தாண்டு கோவை மாவட்டம் உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த ஜமேஷா உபின் என்பவர் வீட்டில் இருந்து வெடிபொருட்கள், தீவிரவாத அமைப்பு வாசகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்தே “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் அறிவிப்பு வெளியானது

கடந்த மார்ச் – ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் 380க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு ரூ.57.51 கோடி செலவில் “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, இத்தகைய தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதம் மற்றும் அத்தியாவசிய நிர்வாக செலவினங்கள் தொடர்பான பட்டியல் அளித்திருந்தார். அதில் ரூ.60 கோடி ஒதுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாகம் செலவுகள் என ரூ.56 கோடியும், திரும்ப பெறப்படாத செலவினமான தளவாட செலவுகளுக்கு ரூ.26 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீவிரவாத தடுப்பு பிரிவானது உளவுத்துறை ஏ.டி.ஜி.பி தலைமையில் செயலபடும் எனவும் எனவும், இதில் 3 எஸ்பி, 4 ஏ.எஸ்.பி, 9 டிஎஸ்பி, 16 இன்ஸ்பெக்டர், 48 சப்-இன்ஸ்பெக்டர், 12 சப்- இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்ப பிரிவு), 45 தலைமை காவலர், 22 கான்ஸ்டபிள், 33 ஓட்டுநர்கள் என 193 பேர் இடம் பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.