லகாபாத்

திபுருஷ் படத்தை எடுத்தவர்கள் குரான் பற்றி படம் எடுத்தால் தெரியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் வெளி வந்துள்ள ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.   இந்த படத்தில் ராமாயணத்தில் வரும் ராமர், அனுமன் போன்ற பாத்திரங்களைக் காட்டியதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இந்த படத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்யக் கோரி பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது..  அப்படி ஒரு வழக்கின் விசாரணை இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,

“இந்த ஆதிபுருஷ் படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை குழு அனுமதி அளித்தது மிகப்பெரிய தவறாகும்.  இந்த படத்தில் ராமாயணத்தின் மதரீதியான கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதம் பலரது உணர்வுகளைப் புண்படுத்தி உள்ளது.  நீங்கள் குரான் அல்லது பைபிள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துப் பாருங்கள் என்ன நடக்கின்றது எனத் தெரியும்”

எனக் கூறி உள்ளார்.

நீதிபதியின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  மத சார்பற்ற நாட்டில் இது போல கருத்துக்களை ஒரு நீதிபதியே கூறலாமா என பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளனர்.