டில்லி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது.   இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் 173 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  பொழுது போக்கு தலங்களான பூங்காக்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் ஆகியவை 31 ஆம் தேதி வரை மூட்டப்பட்டுள்ளன.  அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

டில்லியில் இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி டில்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், “டில்லியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் டில்லியில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் பணிகளைப் பிரித்து, அத்தியாவசியமில்லாத பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. நாளை முதல் அத்தியாவசியமில்லாத பணிகள் அனைத்தும் முதல் நிறுத்தப்படுகிறது

நகரில் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க  சமூக, கலாச்சார, அரசியல் கட்சி கூட்டங்கள் அனைத்துக்கும் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் மட்டுமே நாம் இருக்கிறோம். சமூகத்துக்குப் பரவுவதைத் தடுக்கும் முறைக்கு இன்னும் செல்லவில்லை.

கொரோனா வைரஸ் அறிகுறி வந்தவர்கள் சுய தனிமைக்கு உள்ளானவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அங்கிருந்து வரக்கூடாது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்னும் விதிமுறைகளை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

டில்லியில் வரும் 31-ம் தேதி வரை அனைத்து உணவகங்களும் அமர்ந்து சாப்பிடுவோருக்கு.மூடப்படுகிறது. ஆனால் வீட்டுக்கு உணவுகளை பார்சல் எடுத்துச் செல்லவோ, அல்லது வீட்டுக்கு விநியோகம் செய்யவோ தடை விதிக்கப்படவில்லை.

தினமும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், பேருந்து நிலையங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. அத்துடன்  தனியார் வாகனங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.