ஸ்ரீநகர்:

சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக,  ஜம்மு காஷ்மீரில், மொபைல் சேவைகள், இணையதள சேவைகள், சமூக வலைதள சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில்,  வரும் திங்கட்கிழமை பிற்பகல் முதல் அனைத்து மொபைல் சேவைகளும் இயங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்த  சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்டு மாதம்  5ம் தேதி மத்திய  அரசு ரத்து செய்தது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இணையதள சேவைகள், மொபைல் சேவைகள் தொலைபேசி வசதிகள் முடக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த தடை விதிக்கப்பட்டு சுமார் 2 மாதங்களை கடந்துள்ள நிலையில், இடையில் படிப்படியாக தடைகள் தளர்த்தப்படுட வந்தன. முதலில் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக தடைகள் தளர்த்தப்பட்டு வந்தன. தற்போது அங்கு ஓரளவுக்கு இயல்பு நிலை தொடங்கியதைத் தொடர்ந்து 10ந்தேதி முதல் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என கவர்னர் சத்தியபால் மாலிக் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  ஸ்ரீநகர் உள்பட காஷ்மீரில் பெரும்பாலன இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து,  விரைவில் இணையதள மற்றும் தொலைபேசி சேவைகளை முழுமையாக வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை (14ந்தேதி) பிற்பகல் முதல் ஜம்மு காஷ்மீர் முழுவதும் மொபைல் சேவைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில்,  இயல்பு நிலை முழுமையாக திரும்பியதும் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.