டில்லி:

டைபெற்று முடிந்த லோக்சபா (2019) தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் 86% வேட்பாளர்கள், தங்களின்  டெபாசிட் பணத்தை இழந்துள்ள அவலம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கட்சி வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக பிரதமர் கனவில் மிதந்த மாயாவதி கட்சியும், அடுத்ததாக காங்கிரஸ் கட்சியும் டெபாசிட்டு களை பறிகொடுத்துள்ளது.

நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல்  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 67% பேர் வாக்களித்தாக அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதுபோல இந்திய தேர்தல் வரலாற்றில், அதிகமானோர் வாக்களித்ததும் இந்த தேர்தல்தான் என்றும், அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்திருந்தனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல்கள் நடந்த 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதி களில் வெற்றி பெற்றது. அதே வேளையில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத சோகமும் நிகழ்ந்தது.

இந்த தேர்தலில் போட்டியிட்டவேட்பாளர்களில் டெபாசிட் பறிகொடுத்தவேட்பாளர்கள் எத்தனை பேர் என்று கட்சி வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

542 தொகுதிகளில், 8,026 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில்  86% வேட்பாளர்கள் ‘டெபாசிட்’ இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து, தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்கள் மட்டுமே  டெபாசிட் பெற்றுள்ளனர். மற்ற 6897 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

கட்சிகள் வாரியாக டெபாசிட் இழந்த வேட்பாளர்கள் எத்தனை பேர்?

பகுஜன் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்ட 383 தொகுதிகளில் 345 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளில் 148 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 69 இடங்களில் 51 இடங்களிலும் டெபாசிட் பறிபோய் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 49 இடங்களில் போட்டியிட்டு  41 இடங்களிலும்,

தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 34ல் 14 இடங்களிலும்,

திரிணாமுல் காங்கிரஸ் 62 தொகுதிகளில் 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக 51 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.