சென்னை:
னைத்துக்கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் மத்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு  எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதையொட்டி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்ததும்  நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து  ஸ்டாலின் கூறியதாவது:-
all-party480
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல் விவசாய அமைப்புகளையும் அழைத்து இருந்தோம்.
காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சியினரும் பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுப்பது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அப்படி முன்வராவிட்டால் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து எந்த அளவில் அடுத்த கட்ட போராட்டத்துக்கு செல்வது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்.
செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்:
கேள்வி:- விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சில கட்சிகள் நீங்கள் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார்களே?
பதில்:- நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி நீங்கள் அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும்.
கேள்வி:- அரசியல் ஆதாயத்துக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதாக சொல்கிறார்களே?
பதில்:- எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. முதலில் ஊடகங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்.
கேள்வி:- 10 வருடமாக தி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த போது காவிரி பிரச்சினையில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் குறை கூறி இருக்கிறார்களே?
பதில்:- வைகோ 18 ஆண்டு எம்.பி. ஆக இருந்தவர் தான். இதே போல் பா.ஜனதாவில் உள்ளவர்களும் எம்.பி. ஆக இருந்தவர்கள்தான். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது தலைவர் கலைஞர் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
பா.ஜனதாவில் உள்ளவர்கள் இந்த விவரத்தை வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது,
“அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவது போல் தமிழ்நாட்டிலும் ஒற்றுமையுடன் அனைவரும் செயல்பட வேண்டும்” என்றார்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது,
“அனைத்துக்கட்சி கூட்டம் விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. தமிழக அரசும் விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்றார்.