டெல்லி: என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும் என  காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி  கூறியுள்ளார்.

இஸ்ரேலிய மென்பொருளான பெகாசஸைப் பயன்படுத்தி இந்திய தலைவர்கள் பலரது டெலிபோன்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அரசியல் மூலோபாயவாதி பிரசாந்த் கிஷோர் மற்றும் எதிர்க்கட்சித்  தலைவர்கள் மேலும் பல உலக தலைவர்களின் போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த விவகாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முததல்  நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு  பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு விவகாரம் பூதாகரமாய் வெடித்துள்ளது. நாள்தோறும் அவையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் உச்சகட்டமாக நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாந்தனு சென் பிடுங்கி கிழித்து எறிந்தார். இந்த அநாகரி செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவர் இன்றுமுதல், இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மக்களவை கூடியதும், இந்த விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.  எதிர்க்கட்சி எம்.பி.,களுக்கும், ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையில் மோதல் உருவானது. இதையடுத்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் ஒட்டுக் கேட்க பயன்படுத்த வேண்டியது. ஆனால், நமது நாட்டின்  நிலைமை தலைகீழாக உள்ளது. நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பயன்படுத்தியுள்ளனர்.

என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. ஐபி அதிகாரிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. இது எனது தனிப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. நான் “திறந்த புத்தகம் போன்றவன்”. . ஒருவர் ஊழல் செய்பவர், அல்லது ஒரு திருடன் என்றால் அவர்கள் மட்டுமே பயப்படுவார்கள். நான் இந்த விஷயங்களைப் பற்றி சிரிக்கிறேன்,

பெகாசஸ் மூலம் ஏராளமான இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்களும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தாக்குதல். இந்த விஷயம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். பிரதமருக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.  இந்த விஷயத்திற்கும் பிரதமர் தான் பொறுப்பு. அவர் நினைத்திருக்கலாம் யாரை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று. ஆனால் அப்படி எல்லாரையும் வாங்கிவிட முடியாது என்பது தான் நிதர்சனம்.

இவ்வாறு ராகுல் கூறினார்.