டெல்லி:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஏற்கனவே வெளிநாட்டு விமான சேவைகள் பல நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அனைத்த உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ள நிலையில்,பல நாடுகளுக்கு விமான சேவைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ளது. இதனால், இந்தியாவிலும் உள்நாட்டு விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று இரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்படுவதாக இந்திய விமான துறை அறிவித்து உள்ளது.

மேலும், ஏற்கனவே  திட்டமிடப்பட்ட வணிக விமான நிறுவனங்கள் மார்ச் 24 முதல் 23.59 மணிநேரத்தில் இருந்து நிறுத்தப்படும் என்றும் உள்துறை செய்தி தொடர்பாக அறிவித்து உள்ளார்.