எல்லோரும் வாங்க! அதிமுக தொண்டர்களுக்கு தீபா அழைப்பு!

Must read

சென்னை:

ரு அணிகளும் இணைப்பு என்பது நாடகம். அம்மா ஆட்சி அமைய ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களும் தன் தலைமையில் ஒன்று கூட தனது அணிக்கு வருமாறு  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட நிகழ்வை எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வரவேற்கிறது.

அதே நேரம் அவரிடம் மேலும் புலன்விசாரணை செய்து இலஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது அதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவேண்டும்,

மேலும், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணப்பெட்டியுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்தவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதை பொது மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

அதே நேரம் ஆர்.கே.நகரில் அரசியல் ஆதாயத்திற்காக அம்மா அவர்களின் சவப்பெட்டியுடன் ஆர்.கே.நகரில் அணிவகுத்தவர்களின் ஊழலும் விரைவில் அம்பலமாக உள்ளது.

ஊழல் பெருச்சாளிகள் ஊரை ஏமாற்றுவதற்காக இரு அணிகள் இணைப்பு என்ற தொடர் நாடகத்தை ஊடங்கங்கள் வாயிலாக நிறைவேற்றிவருவதை நாட்டு மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள்.

தற்போது தினகரன் கைது சம்பவத்தை திசை திருப்புவதற்காக அ.தி.மு.க தலைமை அலுவல கத்தில் சசிகலா பேனர் கிழிப்பு, அகற்றம் என்ற ஓரங்க நாடகத்தை இரு அணிகளும் நடத்தி வருவதை புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உண்மைத் தொண்டர்கள் இவர்கள் நாடகத்தை கண்டு ஏமாறமாட்டார்கள்.

அ.தி.மு.கவையும் இரட்டை இலையையும் மீட்டெடுக்கும் வரை எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஓயாது உறங்காது, அம்மா அவர்களின் மக்கள் பணி தொடர ஆட்சியையும் மக்கள் சக்தியுடன் பேராதரவுடன் விரைவில் பிடிப்போம்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்திற்குரியதாகும்.

எம்ஜிஆர் அவர்களால் கண்டெடுத்த இரட்டை இலை பல வெற்றி சரித்திரத்தை உருவாக்கியுள்ளது.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரட்டை இலை மூலம் பல அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தி தொடர் வெற்றி சரித்திரத்தை நம் கையில் கொடுத்து சென்றுள்ளார்.

எடுத்தேன் கவிழ்ப்பேன் என்ற பாணியில் ராம்தாஸ் போன்றவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கத்தையும் சின்னத்தையும் பேசுவது புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுவது போன்றதாகும்.

ஆகவே, விரைவில் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைந்து அம்மா அவர்களின் 2023 தொலைநோக்கு கனவுத் திட்டத்தை நனவாக்க அயராது உழைப்போம். மனமாச்சீரியங்களை புறந்தள்ளுவோம்,

இரு ஊழல் அணிகளை அப்புறப்படுத்துவோம் அம்மாவைப் போன்று தாய் உள்ளதோடு அம்மாவின் தொண்டர்களை அன்புடன் அழைக்கிறேன்.

தமிழகத்தில் தற்போது இருள் சூழ்ந்துள்ளது தமிழக அரசு நிலைத்தன்மை இல்லாததால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை தலைநகரிலே மின்சாரம் இல்லை வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது.

காவேரியில் தண்ணீர் இல்லை, வைகை வறண்டு விட்டது, தாமிரபரணி தண்ணீர் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் வீதிக்கு வந்து பினாமி சசிகலா அரசை எதிர்த்து போராடவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் தமிழகத்தை ஒளிமயமாக்க அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தமிழக மக்களுக்கு எனது தலைமையில் பொற்கால ஆட்சியை ஏற்படுத்தித்தர அனைவரையும் தாய் உள்ளதோடு மீண்டும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

More articles

Latest article