மதுரை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, உலகப்புகழ் பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஜனவரி 17ந்தேதி  நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் வரும் 30ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் 20ந்தேதிக்கு பிறகு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகளுடன்  அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில்,  ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடத்துவது கேள்விக்குறியானது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் கலந்தாலோசித்தமதுரை மாவட்டஆட்சியர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் திங்கள் கிழமை ஜனவரி 17ஆம் நாள் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம். இதனை அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைய கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதனுடன் மிகச் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.

மேலும்,  ஜல்லிக்கட்டு போட்டியை காணும்,  பார்வையாளர்களுக்கான ஆன்லைன் பதிவு இன்று 3 மணியிலிருந்து நாளை 5 மணி வரை நடைபெறும். பாரம்பரிய முறைப்படி தை முதலாம் தேதி அதாவது ஜனவரி 14-ல் மதுரை அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 17-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். மூன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துதான் ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் பதிவில் பங்கேற்பதற்கான பதிவின் அடிப்படையில் முன்னுரிமை அனுமதி வழங்கப்படும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இதில் பார்வையாளர்கள் எதற்கு முன்னுரிமை அளித்துப் பதிவு செய்கிறார்களோ அதன் அடிப்படையில் பதிவு செய்யலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 150 பார்வையாளர்கள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு நிகழ்விலும் அனுமதிக்கப்படுவார்கள். வெளியூர் பார்வை யாளர்கள் என்றாலும் வழங்கப்பட உள்ள பாஸ் (அனுமதிச் சீட்டு) என்ற அடிப்படையில்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்”.

இவ்வாறு கூறினார்.