சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு  வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

சென்னையைச் சேர்ந்த  வேல்ஸ் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு,  கலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும்  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது. இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டங்களை பல திரையுலக பிரபலங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது நடிகர் சிம்புவுக்கு கிடைத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.  குழந்தை நட்சத்திரமாக கலையுலகில் வாழ்க்கையை தொடங்கிய சிம்பு பாடகர், பாடலாசிரியர் என பலவேறு துறைகளில் படைத்திருக்கும் சாதனையை கருத்தில் கொண்டு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, பாரா ஒலிம்பிக் பதக்கம் வீரர் சேலம்  மாரியப்பனுக்கும்  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறையில் அவர் செய்த சாதனைக்காக டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அவரது படத்தைப் பகிர்ந்து இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு டாக்டர் பட்டம் பெறும் விழாவில், அவரது  தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ராஜேந்தர் உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தற்போது தயாரித்து வருகிறார். சிம்பு நடிப்பில் மேலுமொரு படத்தை அவர் தயாரிக்க அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.