மும்பை: கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது அடிக்கடி நிகழ்த்தப்படும் ரெய்டுகள், தேடுதல் வேட்டைகள் மற்றும் விளக்கம் கேட்பு நோட்டீஸ்கள் போன்ற அரசின் செயல்கள், வணிக சமூகத்தின் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்குவதற்காகத்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரபல தொழிலதிபர் அஜய் பிரமல்.

இவர் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் பிரமல் குழுமத்தின் ஒரு பகுதியான என்பிஎஃப்சி -உடனான முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஜப்பான் முதலீட்டாளரான சாஃப்ட்பேங்க் வெளியேறியது குறித்து ஊடக செய்திகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அஜய் பிரமல்.

அவரின் குழுமத்தில் பலவிதமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்&டி நிறுவனத்தின் ஏ.எம்.நாயக் மற்றும் பிற தொழிலதிபர்கள் இதேபோன்றதொரு கவலையை வெளிப்படுத்தும் தருணத்தில், அஜய் பிரமலின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

அதேசமயம், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரிச் சலுகை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை வெளிநாட்டிற்கு செல்லவிடாமல் தடுத்தது, வீடியோகான் குழும நிறுவனர்களின் இடங்களில் ரெய்டு நடத்தியது உள்ளிட்ட சம்பவங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் இத்தகைய கருத்துகள் வெளிவருகின்றன.