புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, அந்த இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை(அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

“ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் மற்றும் அதனைச் சுற்றிய விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டபோது இத்தகைய தகவல்கள் கிடைத்தன” என்பது உளவுத்துறை அளித்த தகவல்.
ஆரஞ்சு எச்சரிக்கை என்பது இரண்டாவது மிகப்பெரிய எச்சரிக்கையாக குறிப்பிடப்படுகிறது. இது ரெட் எச்சரிக்கை என்பதாக இருந்தால், அருகிலுள்ள பள்ளிகளை மூடி, அப்பகுதியில் மக்கள் நடமாடமாட்டத்தை தடைவிதிக்கவும் வாய்ப்புள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர்தான் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதேவகையான எச்சரிக்கை வந்துள்ளது. அதேசமயம், பயங்கரவாதிகள் குறித்து அடிக்கடி விடுக்கப்படும் எச்சரிக்கைகள், அரசின் தோல்வி குறித்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிதான் என்றும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.