டில்லி:

டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜய்மக்கான் தனதுபதவியை ராஜினாமா செய்தார். உடல்நலம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர்ன  அஜய் மக்கான் கடந்த 4 ஆண்டுகளாக டில்லி மாநிலகாங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஷீலா தீட்சித் மாற்றப்பட்டு, அஜய் மக்கன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், டந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை காங்கிரஸ் கட்சி பெறாததால், அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் அஜய்மக்கான். ஆனால், காங்கிரஸ் மேலிடம் வற்புறுத்தியதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.

இடையில் சில மாதங்கள் உடல்நலக் குறைவு காரணமாக தலைவர் பொறுப்பில்  இருந்து தற்காலிகமாக விலகியிருப்பதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், நேற்று இரவு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அஜய்மக்கான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “2015 தேர்தலுக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய 4 ஆண்டுகளில் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததுடன், எனக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கிலேயே தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அஜய் மக்கான் ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.