டில்லி

ந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் குறித்து தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் அளித்துள்ளன.

இரண்டாம் முறையாக அமைந்துள்ள பாஜக அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவர் இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதை ஒட்டி அவருக்கு பலரும் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து அளித்து வருகின்றனர். அவ்வகையில் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமர்ஜீத் கவுர் மத்திய நிதி அமைச்சர், உள்ளிட்டோருடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளர்.

அப்போது அவர் அளித்த அறிக்கையில், “தற்போது நாட்டில் பல இடங்களில் வருடத்தில் 100 நாட்கள் கிராமப்புற கட்டாய பணி திட்டம் நடைபெற்று வருகிறது. அதை வருடத்தில் 200 நாளாக மாற்ற வேண்டும். அத்துடன் இந்த கிராமப்புற் கட்டாய பணி திட்டம் நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 20,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.6,000 அளிக்க வேண்டும்.

மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்பட வேண்டும். அதில் வீட்டு வசதி, மருத்துவம்,கல்விக்கான படிகள் எவையும் சேர்க்கக் கூடாது. வயது முதிர்ந்தோருக்கு ரூ.8 லட்சம் வரை வருமான வரி விலக்கு உயர்த்தப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு நிறுவனங்களை தனியாருக்கு மாற்றக் கூடாது.

எங்கள் கூட்டமைப்பில் நாடெங்கும் உள்ள 10 மத்திய தொழிற்சங்க குழுக்கள் இணைந்துள்ளன. அந்த குழுக்கள் சார்பில் இந்த வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு அளிக்கிறோம். அது மட்டுமின்றி தொழிலாளர்களுக்கான சமூக நிலையை உயர்த்த தேவையான நலத்திட்டங்களை இந்த அரசு நிதிநிலை அறிக்கையின் மூலம் அமுல்படுத்த வேண்டும்.” என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.