திருப்பதி

திருமலை வெங்கடாசலப்தி பெருமாளுக்கு தேனியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தங்க கை கவசங்கள் காணிக்கை அளித்துள்ளார்.

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் குவியும் பக்தர்கள் எண்ணிக்கையை போல் காணிக்கையும் அதிகமாகும். பலர் பணம், பொருட்கள் மட்டுமின்றி தங்க வைர நகைகளும் அளிப்பதுண்டு. நேற்று முன் தினம் பெருமாளை தரிசிக்க தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் திருமலை கோவிலுக்கு வந்துள்ளார். அவர் நேற்றும் தரிசனம் செய்துள்ளார்.

தங்கதுரை நேற்று தங்க கை கவசத்தை திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு காணிக்க செலுத்தி உள்ளார். இந்த கை கவசத்தின் மதிப்பு ரூ.2.5 கோடி ஆகும். இந்த காணிக்கையை தங்கதுரை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கி உள்ளார். அதன் பிறகு தங்கதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

தங்கதுரை செய்தியாளர்களிடம், “நான் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அப்போஒலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அந்த நேரத்தில் எனது உடல் நிலை சீரடைந்தால் பெருமாளுக்கு கை கவசம் காணிக்கை அளிப்பதாக நேர்ந்துக் கொண்டேன். அதனால் தற்போது இந்த கவசங்களை அளித்துள்ளேன்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்பு இந்த கவசம் காணிக்கை அளிக்க உள்ள்து குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நான் தெரிவித்தேன். அந்த கவசம் செய்ய உதவியாக அவர்கள் பெருமாளின் மூல விக்ரகத்தின் கை அளவுகளை அளித்தனர். அந்த அளவுக்கு ஏற்ப நான் கவசம் செய்ய ஏற்பாடு செய்தேன். அந்த கவசங்கள் தற்போது தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.