ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் ‘பூமிகா’, ‘திட்டம் இரண்டு’, ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘டக் ஜெகதீஷ்’ படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
கடந்த சித்திரை1 (ஏப்.14) அன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “ இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம். அதிரடி டிரைவராக நடித்திருக்கிறேன். நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்றார்.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.