‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இந்த படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்துக்குத் தயாரானார் ரதீந்திரன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான நாயகியாக நடிக்கும் ‘பூமிகா’ படத்தை ரதீந்திரன் இயக்கினார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக ‘பூமிகா’ உருவாகியுள்ளது.

ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ‘மண்டேலா’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்ட சில படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘பூமிகா’ படமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விஜய் டிவியில் ‘பூமிகா’ படம் ஒளிபரப்பாகும். அன்றைய தினமே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.