ஜோத்பூர்-

ராஜஸ்தானில் பொதுமக்கள் சேவைக்காக விமானநிலையம் அமைக்காதவரை பிரதமர் மோடி விமானத்தை தரையிறங்க அனுமதிக்கமாட்டேன் என  அம்மாநில பாஜக எம்எல் ஏ அறைகூவல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்திர ராஜே தலைமையில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்தமாநிலத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் விமான சேவை குறைபாடு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள  கோட்டாநகரில் நேற்று அரசு விழா நடைபெற்றது. அதில் பேசிய பாஜக எம்எல்ஏ பவானிசிங் ராஜாவாட், கோட்டாநகரில் அரசியல்வாதிகளின் விமானம் மட்டும் தரையிறங்கும் வகையில் வானூர்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால்

பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விமானநிலையம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர்,  கோட்டாவில் மக்கள் பயன்பாட்டுக்கு விமானநிலையம் அமைக்கவேண்டும். அதுவரை பிரதமர் மோடியின் விமானத்தை தரையிறங்க விடபோவதில்லை என கூறினார். அப்படிச் செய்தால்தான் மக்களுக்கான விமான நிலையம் குறித்த அவசியத்தை அவர்கள் உணர்வார்கள் என்றும் அவர் கூறினார். விமானங்கள் இல்லாதபோது மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதால் என்ன பலனிருக்கப் போகிறது என்றும் பவானிசிங் கேள்வி எழுப்பினார்.

கடந்த 1994 ம் ஆண்டு விமான வழித்தடங்கள் போதுமான இல்லாத து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோட்டாவில் விமான சேவை நிறுத்தப்பட்டது. அன்றுமுதல் விமான சேவை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரிக்கை எழுப்ப ப்பட்டு வருகிறது.

பவானிசிங்கின் பேச்சுகள் ஒளிநாடாவில் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சர்ச்சைக்குரிய பல விசயங்களில் தொடர்புடைய பாஜக எம்எல்ஏ பவானிசிங் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.