சென்னை:  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து  புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன்,  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. இது அடுத்த  24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால்  தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் தற்போது,  கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது.   இது புயலாக மாறி இலங்கையில் கரையும கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும்,  குமரிக்கடல் பகுதி வரை புயல் நீடிக்கும். இதனால்,  மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் இடி மின்னலுடன்  கனமழை பெய்யும்,  பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் நல்ல மழை  பய்யும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 80 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதுடன்,  அதற்கு  மாலத்தீவு வழங்கிய  புரெவி என்ற பெயா் வைக்கப்படும்.