புதுடெல்லி:
ர் இந்தியாவை விற்போம், முடியலேனா மூடுவோம் என்று அமைச்சர் ஹர்தீப்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருவது மட்டும் அல்லாமல் அதீத கடன் சுமையில் தவித்து வருகிறது.

ஏர் இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு இத்துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும் மிக முக்கியக் காரணமாகும். இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்குச் சுமையாக மாறியுள்ள காரணத்தால், மோடி தலைமையிலான இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்க முடிவு செய்திருக்கும் நிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிரடியாகக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை 100 சதவீதம் தனியார்மயமாக்க வேண்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களில் தகுதி பெற்றவர்கள் அடுத்த 64 நாட்களுக்குள் ஏல தொகையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏர் இந்தியாவை 100 சதவீதம் பங்குகளை விற்பனை செய்து முழுமையாகத் தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதா அல்லது தனியார்மயமாக்க வேண்டாமா என்ற நிலையைத் தாண்டி, தனியார்மயமாக்குவது அல்லது நிறுவனத்தை மூடுவது என்ற நிலைக்கு வந்துள்ளது.

ஏர் இந்தியா மத்திய அரசின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான சொத்து, ஆனால் இந்நிறுவனம் தற்போது 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனை சுமந்து வர்த்தகம் பெற முடியாமலும், தொடர்ந்து இயங்க முடியாமலும் தவித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்த்து ஆக வேண்டும் எனவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் பூரி கூறினார்.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் தற்போது விஸ்தாரா, ஏர்ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா குழுமம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மற்றும் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஆகியவை தேர்வாகி அதீத வாய்ப்புகளைப் பெற உள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்கள் குழு உட்பட எஸ்ஸார், பவன் ரூயாவின் டன்லப், பால்கன் டையர்ஸ் ஆகிய நிறுவனங்களின் விருப்ப விண்ணப்பங்களையும் மத்திய அரசின் முதற்கட்ட ஆய்வில் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்து 5 முறை தோல்வி அடைந்து தற்போது 6வது முறையாக லாக்டவுன் காலத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியாவின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிறுவனமான AI-SATS பிரிவில் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து விருப்ப விண்ணப்பத்தைப் பெற்றது.

மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் ஏர் இந்தியாவின் மொத்த கடன் மதிப்பு 60,074 கோடி ரூபாய், இதில் 23,286.5 கோடி ரூபாய்க் கடனை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏற்க வேண்டும். எஞ்சியுள்ள தொகையை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்றுக்கொள்ளும்.

இந்தியா விமானப் போக்குவரத்தில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் பல புதிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்க ஆர்வம் காட்டியது, ஆனால் அதிகளவிலான நிறுவனங்கள் முதற்கட்ட ஆய்விலேயே தோல்வி அடைந்தது.