டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது.

கொரோனா என்ற வைரசானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டி இருக்கிறது.

இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 18 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புக்காக 600 இந்தியர்கள் உகான் நகரில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததும் அவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கியது.

இந்தியர்களை மீட்க ஏற்கனவே போயிங் 747 ரக விமானத்தை மத்திய அரசு மும்பையில் தயாராக நிறுத்தி இருந்தது. அந்த விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து அங்கிருந்து, சீனா புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து பதிவை காங்கிரசின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

இன்று ஏர் இந்தியா குழுவினர் வுஹானுக்குச் சென்றுள்ளனர். அங்கு சிக்கித் தவிக்கும் சக, சகோதரர்களை வெளியேற்றுவதற்கான கடமை அழைப்பு.  இந்த துணிச்சல் மிக்கவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க NDA / BJP அரசு  விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.