விஜய் மல்லையா                                                                                                    கோபிநாத்

டில்லி

விஜய் மல்லையா குறித்து ஏர் டெக்கான் விமான நிறுவன தலைவர்  கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக சுமார் ரூ. 1000 கோடிக்கு விஜய் மல்லையா விலைக்கு வாங்கினார்.   கடந்த 2007ல் வாங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்காக விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ. 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கி உள்ளார்.  அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க லண்டனுக்கு சென்று விட்டார்.

வங்கிகள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீது வழக்கு தொடர்ந்துள்ளன.   அவரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த இரு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.   இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவின் சுமார் ரூ.9900 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கினால் முடக்கி வைத்துள்ளது.   இதை எதிர்த்து விஜய் மல்லையாவும் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஏர் டெக்கான் நிறுவனம் கடந்த 23ஆம் தேதி முதல் மீண்டும் தனது விமான சேவையை துவங்கி உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத் தலைவர் கோபிநாத், “விஜய் மல்லையா கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் வங்கியில் கடன்கள் வாங்கி திருப்பித் தரவில்லை.   அதனால் தற்போதைய பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.   அவரை அரசியலில் ஒரு கால் பந்து போல அரசு பாவித்து வருகிறது.  அது மட்டுமின்றி  கடனை திருப்ப செலுத்தாதற்காக அவர் பெயரை வங்கிகள் கெடுத்து வருகின்றன.

என்னைப் பொறுத்தவரை அவரின் வீழ்ச்சிக்கு அரசியல் மட்டும் காரணம் அல்ல.   அவரது  நடவடிக்கைகளே காரணம் என்பேன்.  அவருக்கு மது வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைத்தது.  அவர் அதைக் கொண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டங்களை சரிக்கட்டி அந்த நிறுவனத்தை நன்கு இயங்கச் செய்திருக்கலாம்.   ஆனால் இப்போது அதைக் குறிப்பிடுவது மிகவும் தாமதமான ஒன்று.

ஸ்பஸ்ஜெட் விமான நிறுவனம் இதை விட அதிக நஷ்டத்தில் இயங்கிய போதும் அதை மீட்க முடிந்த போது மல்லையா முயன்றிருந்தால் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் காப்பாற்றப் பட்டிருக்கும்.  ஆனால் விஜய் மல்லையா எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவர் செய்த தவறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.